London:
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தன் ஆராய்ச்சியில் இருக்கும் தடுப்பு மருந்து குறித்து பல்கலைக்கழக ஆய்வுக் குழு, ‘பாசிட்டிவான செய்தி’ இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனையானது, 3 ஆம் நிலை மனித பரிசோதனையில் உள்ளது. அதே நேரத்தில் இன்னும் அந்த மருந்தின், முதல் நிலை மனித பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த முதல் நிலை பரிசோதனை முடிவுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தி லான்சட் மருத்துவ இதழ் மூலம் இந்த பரிசோதனை முடிவுகள் பொதுத் தளத்திற்கு வரும்.
உலகளவில் சுமார் 100 கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை அளவில் உள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்து, சோதனை நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பு மருந்தின் உரிமமானது, AstraZeneca என்னும் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துதான் கொரோனா தடுப்பில் செய்யப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சிகளில் முதன்மையானது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
இப்படியான சூழலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர், “இப்போதைக்கு எந்த நேரத்தில் இந்த கொரோனா தடுப்பு மருந்து குறித்தான தகவல்கள் வெளியிடப்படும் என்பது குறித்து தெரிவிக்க முடியாது” என்று மட்டும் கூறியுள்ளார்.
அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த Moderna Inc நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கொரோனா தடுப்பு மருந்து குறித்து மிக நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதாக தெரிவித்தனர். 45 மனிதர்கள் மீது சோதனை நடத்தியதில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக கூறினர்.
இந்த நிறுவனமானது, கடந்த மே மாதம், கொரோனா தடுப்பு மருந்திற்கான இரண்டாம் நிலை மனித பரிசோதனைகளை ஆரம்பித்தது. வரும் ஜூலை 27 ஆம் தேதி, மூன்றாம் நிலை மனித பரிசோதனையை ஆரம்பிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.