டெல்லி: பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் – 2009படி 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக்கூடாது. இதனால் நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ,மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தேர்ச்சியடையச் செய்வதனால் நடுநிலை பள்ளிக்கல்வி முடிந்து உயர்நிலை கல்விக்கு செல்லும் பலரும் திணறுகின்றனர். மாணவர்களின் கல்வித்தரவும் பாதிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே சமீபத்தில் தெரிவித்தார். அனைவரும் தேர்ச்சி பெறும் திட்டத்தால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்யும் திட்டத்தை வாபஸ் பெறுவது என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டால், பள்ளி இறுதி தேர்வில் பாஸ் ஆகாத 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இதிலும் அவர்கள் ஃபெயிலானால் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியிருக்கும். இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டில் 20 உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.