25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

0
1199

சிறுபான்மை பிரிவு அல்லாத அல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்காக குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை பிரிவு அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் அவர்களது குடியிருப்பிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் மே 18-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 268 சிறுபான்மை பிரிவு அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 20 இடங்கள் உள்ளன. இதற்கு 5 ஆயிரத்து 621 பேர் இணையதளம் வழியாக விண்ணப்பித்து இருந்தனர். இதில் விண்ணப்பம் செய்தவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விண்ணப்பதாரர்களின் எண்கள் எழுதப்பட்டு அவற்றை ஒரு பிளாஸ்டிக் வட்டகையில் வைத்து குழந்தைகளை வைத்து எடுக்க செய்தனர். அதன்படி அந்த குழந்தைகள் எடுத்த எண்ணில் உள்ள மாணவர்கள் இந்த முறையில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.

கீழ்நாச்சிப்பட்டு காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதை திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here