10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

0
2906

தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணி திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ஆர்.சக்திவேல், தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் எம்.சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார்.

இதில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ரகு, மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் விநாயகம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் 21 மாத நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து வீட்டிற்கு சென்றனர்.

ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. அப்போது பள்ளி வளாகத்தின் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் 200 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here