நீதிமன்ற உத்தரவுக்குப் பின் ஆலோசனை நடத்திய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ளன.
போராட்டத்தை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் வேலை நிறுத்தத்தை விலக்கி கொள்வதா? தொடர்வதா என்பது குறித்து சிஐடியூ, தொமுச, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியது.
பின்னர் கூட்டாக தங்கள் முடிவை தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்தனர். அதில் வேலை நிறுத்தத்தை தொடர்வது என்று கூட்டாக அறிவித்தனர்.
இது குறித்து தொமுச தலைவர் சண்முகம் கூறியதாவது:
”வேலை நிறுத்தத்தின் முக்கியம் நோக்கம் என்ன? இந்தப் போராட்டம் சட்ட ரீதியாக எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதையும்,16 மாதங்களாக ஊதிய உயர்வு கொடுப்பதில் நிர்வாகம் எப்படி காலதாமதம் செய்து வந்தது. தொழிலாளர்களிடம் பிடித்த பணத்தை நிர்வாகத்திற்காக எடுத்து செல்வு செய்திருப்பது, போன்ற அவலங்களை எல்லாம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தோம்.
தொழிலாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக எப்படி தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர்கள் சிறப்பாக தலைமை நீதிபதியிடம் எடுத்துரைத்தனர். இதைக்கேட்டு தலைமை நீதிபதி வியந்து போனார். தொழிலாளிகளிடம் பிடித்த பணத்தை வைத்து நீங்கள் எப்படி நிர்வாகம் நடத்தலாம், உடனடியாக அவர்களிடம் பிடித்த பணம் அத்தனையும் திருப்பி வழங்கிட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.
தொடர்ந்து தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் எங்களது போராட்டம் நியாயமான போராட்டம் சட்டரீதியாக நோட்டீஸ் கொடுத்துதான் போராட்டம் நடத்தியுள்ளோம். மே மாதம் நடத்திய போராட்டத்தின் போது 3 அமைச்சர்கள் முதல்வர் சார்பாக வந்து செப்டம்பர் மாதத்திற்குள் தொழிலாளர்களிடம் பிடித்த அத்தனை பணத்தையும் திருப்பித் தருவதாகவும் இனி வரும் காலங்களில் அவ்வப்போது பணப்பயன்களை தந்து விடுகிறோம் என்று கையொப்பம் இட்டு ஒப்பந்தம் போட்டனர்.
ஆனால் அதன்படி நடக்கவில்லை. பல மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை அதன் பின்னர் போராட்டம் அறிவித்த பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். இப்படி பல முறை நடந்தது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே எங்களுக்கு தெரியாமல் பக்கத்து அறையில் தொழிலாளர் நலத்துறை ஆணையரை வரவழைத்து ஒரு துரோக ஒப்பந்தத்தை போட்டு நிறைவேற்றப் பார்த்தனர்.
துரோகத்தனத்தை கண்டித்துதான் இந்த வேலை நிறுத்தம் வெகுவாக பரவியது என்று விளக்கி கூறினர்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வேலை நிறுத்தத்தை தடை செய்ததோடு, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பலன்களையும் தாமதமின்றி வழங்க வேண்டும். ஊதிய உயர்வு மற்ற பிரச்சினைகள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை ஓய்வூதியம் சம்பந்தமாக விசாரிக்கும் மூன்றாவது அமர்வுக்கு மாற்றுகிறேன். உடனடியாக அவர்கள் விசாரித்து முடிவுகாண ஏற்பாடு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இங்கு அத்தனை தொழிற்சங்கங்களும் அமர்ந்து பேசி முடிவெடுத்துள்ளோம். தமிழக அரசு இனிமேலாவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பாடாமல், கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கெனவே செய்த சட்டவிரோத ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்தத்தை பேசி நிறைவேற்ற வேண்டும்.
பயிற்சி இல்லாத ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி விபத்துகள் ஏற்படுவதும், பயிற்சி இல்லாத நடத்துனர்களை வைத்து வசூலிக்கப்படும் பணம் கபளீகரம் செய்யப்படுவதும் நடக்கிறது. நியாயமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸாரின் அத்துமீறல் நடக்கிறது, பொய் வழக்குகள் போடுவது நடக்கிறது. இவை எல்லாவற்றையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவைகளை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அடுத்து நாளை மாலையில் போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வளவு பிரச்சினைக்கு நடுவில் தொழிலாளர்கள் உறுதியுடன் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதில் வலிமையாகவும் இருக்கிறார்கள். ஆகவே இந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.”