முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து!!

0
4605

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் களமிறங்கினர். இதில் மார்ட்டின் கப்தில் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் உடன் கைக்கோர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கேன் வில்லியம்சன் 30 ரன்களில் கேட்ச் ஆக, அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களில் போல்ட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய ராஸ் டெய்லர் 15 ரன்னிலும், ஜேம்ஸ் நீ‌ஷம் 19 ரன்னிலும், கிரான்ட்ஹோம் 16 ரன்னிலும், டாம் லாதம் 47 ரன்களிலும், மேட் ஹென்றி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்தது. கடைசியில்  மிட்செல் சான்ட்னெர்  5 ரன்னுடனும், டிரென்ட் பவுல்ட்  1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணியில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் ஜாசன் ராய் 17 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 7 ரன்னிலும் கேட்ச் ஆகி வெளியேறினர்.
அதற்கு பின் ஜானி பேர்ஸ்டோ 36 ரன்களிலும், மோர்கன் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர். இதில் ஜோஸ் பட்லர் 59 ரன்களிலும், அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதற்கு பின் பிளங்கெட் 10 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 
இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது.  கடைசியில் அணிக்காக தொடர்ந்து போராடிய பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து அணியில் பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீ‌ஷம் தலா 3 விக்கெட்டுகளும், கிரான்ட்ஹோம் மற்றும்  மேட் ஹென்றி தலா 1 விக்கெட்டும்  வீழ்த்தினர்.
பின்பு வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது, இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி  15 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 15  ரன்கள் எடுத்ததால் ஆட்டம் மீண்டும் டை  ஆனது.
இதனையடுத்து சூப்பர் ஓவர் முறையும் டை ஆனதால், நியூசிலாந்து அணியை விட   அதிக பவுண்டரிகள்  அடித்திருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here