சென்னை : மருத்துவ மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக அரசு முடிவு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடையே எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும். ஆனால்,
மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையால், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தானர்
இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, அரசாணை ஒருதலைபட்சமாக இருப்பதாகக் கூறி ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த மனுவை எதிர்த்து தமிழக அரசும், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்மறையீட்டு மனு நீதிபதி மூர்த்தி ராமமோகனராவ், தண்டபாணி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அரசு பிறப்பித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் மருத்துவ சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டபின்னர் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.