உலக மன நல தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
திருவண்ணாமலை அப்பா மன நல மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு சிறப்பு மன நல மருத்துவர் எம்.செல்வகுமார் தலைமை வகித்தார். திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மன நல விழிப்புணர்வுப் பேரணியை தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே நிறைவடைந்தது.
பின்னர், திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இலவச விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தொழிலதிபர் எம்.இ.ஜமாலுதீன் முகாமை தொடக்கி வைத்தார்.
இதில், பயிற்சி துணை ஆட்சியர் சுரேஷ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, வட்டாட்சியர் ஆர்.ரவி, வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன், அப்பா மன நல மருத்துவமனை மருத்துவர்கள் எம்.யாழினி, பி.மணிமேகலை,
வி.அசோக்குமார், என்.பிரசன்னா மற்றும் மன நல ஆலோசகர்கள், மதுபோதை மீட்பு மைய களப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.