படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம்: கலெக்டர் தகவல்

0
2577

படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று தொழில் தொடங்கலாம். இதற்கு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த கடன் உதவி பெற 21 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் செய்ய கடன் உதவி வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு சென்னையில் உள்ள தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் மூலமாக 15 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தகுதியுடைய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 11 மணி அளவில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு வழிமுறைகளை தெரிந்து கொண்டு விண்ணப்பபடிவம் பெற்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கான அனுமதிகளைப்பெற வகை செய்யும் தனி இணையதளம் http://easybusiness.tn.gov.in/msme என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுகாதார துறையிடமிருந்து பெற வேண்டிய தடையின்மை சான்று, உள்ளாட்சித்துறையிடம் இருந்து பெற வேண்டிய உரிமம், மின் வாரியத்திடம் இருந்து பெற வேண்டிய இணைப்பு ஆகிய சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, தொழில் முனைவோர்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு செல்லாமல் மேற்படி இணையதளம் மூலம் விண்ணப்பித்து சுகாதார துறையிடமிருந்து பெற வேண்டிய தடையின்மை சான்று, உள்ளாட்சித்துறையிடம் இருந்து பெற வேண்டிய உரிமம், மின் வாரியத்திடம் இருந்து பெற வேண்டிய இணைப்பு ஆகிய சேவைகளை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here