டெல்லி : நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து சிபிஎஸ்இ நீட் தேர்வுகளை நடத்தி முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று அரசு கோரி வருகிறது. மேலும் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காமல் இருக்க 85 சதவீத உள்ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது, அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் லோக்சபாவின் அதிமுக துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார். நிரந்தர விலக்கு அளிக்க முடியாவிட்டால் தற்காலிகமாக விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவை மத்திய அரசிடம் அளித்துள்ளதாக தெரிகிறது. தற்போதைய நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவிற்காவது ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விரைவில் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவசரச் சட்டம்
கொண்டு வந்து நீட் தேர்வில் விலக்கு பெற்று கலந்தாய்வை நடத்தும் முனைப்பில் அரசு உள்ளது.