‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

0
1961

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது.

அடுத்த மாதம்(மே) 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) நேற்று முன்தினம் வெளியானது. கடந்த ஆண்டு தேர்வுக்கு முந்தைய நாட்களில் அதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதை சில மாணவ-மாணவிகள் கவனிக்காததால், தேர்வுக்கு வந்த கடைசி நேரத்தில் உடைக்கட்டுப்பாடு, அணிகலன்கள் அணிய தடை என பல்வேறு சம்பவங்கள் தேர்வு மையத்தின் முன்பு அரங்கேறின. இதனால் சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டிலேயே உடைக்கட்டுப்பாடு, தேர்வு விதிமுறைகள் ஆகியவை தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, உடைக்கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள்(ஹாப் ஸ்லீவ்ஸ்) அணிந்து வரவேண்டும். அதில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம்பெறக்கூடாது. சல்வார் மற்றும் பேண்ட் அணிந்துவரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணியவேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகளுக்கு அனுமதி கிடையாது.

மேலும், தொலைதொடர்பு சாதனங்களான செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், பேனா, அளவுகோல்(ஸ்கேல்), பரீட்சை அட்டை, பென் டிரைவ்ஸ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர் ஆகியவை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மணிபர்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி, கைக்கெடிகாரம், கேமரா, உலோக பொருட்கள், மூடப்பட்ட நிலையில் இருக்கும் சாப்பிடும் உணவு பொருட்கள், வாட்டர் பாட்டில் ஆகியவற்றையும் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ‘நீட்’ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையமும் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மாணவ-மாணவிகள் விண்ணப்பித்த போது 3 விருப்பங்களை கேட்டு இருந்தனர். அதன்படி, தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் 3 இடங்களில் தேர்வு மையங்களை கேட்டிருந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தெரியாத மாநிலத்தில் முகவரியை தேடி கண்டுபிடித்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தன்னுடைய இணையதளத்தில் தேர்வு மையத்தை எக்காரணத்தை கொண்டும் மாற்ற இயலாது என்றும், தேர்வு மையத்தை தேர்வு செய்வது கணினி முறை என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here