திருவண்ணாமலையில் பிரபலமானவர் மூக்குப் பொடி சாமியார். அவர் பிரபலத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளது அது தான் டிடிவி தினகரன்.
திருவண்ணாமலைகோயிலில் பல சாமியார்கள், ஆன்மிக குருக்கள் வாழும் ஒரு இடமாக இருக்கின்றது.
அந்த வகையில் திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் அமைந்துள்ள ஷேசாத்திரி ஆஸ்ரமத்தில் வசித்து வந்தவர் தான் மூக்கு பொடி சித்தர். இவரின் அருளைப் பெற அமமுக.,வை சேர்ந்த டிடிவி தினகரன் அடிக்கடி நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்தார். சித்தரின் ஆஸ்ரமத்திற்கு சென்று தியானம் செய்வது வழக்கமாக வைத்திருந்தார்.
மூக்குபொடி சித்தர் சொல்வது தான் என் வேத வாக்கு என்பது போல் டிடிவி தினகரன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
முருகானந்தம் சுவாமிகள் மூக்குப் பொடி போடும் பழக்கம் உடையவர். இதனால், யாரெல்லாம் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கிறார்களோ, அவர்களெல்லாம், மூக்குப் பொடி வாங்கிச் செல்வர். உள்ளூர் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களும், இவரிடம் ஆசீர்வாதம் வாங்கிச் செல்வர்.
ஆனால், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவும் மாட்டார். ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் பக்தர்களை கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அடிப்பார். அடி வாங்கினார், பாவங்கள் தொலைந்து கர்ம வினைகள் தீர்ந்து நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
உள்ளூரில் பிரபலமான தொழிலதிபர் நடத்தும் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்து கல்லா பெட்டியை திறந்து கைக்கு வந்த பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு செல்வார். மேலும், அந்தப் பணத்தை கோயிலுக்கு தன்னிடம் ஆசீர்வாதம் வாங்க வரும் பக்தர்களுக்கோ அல்லது கிரிவலம் வருவதற்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கோ கொடுப்பார்.
அவரை அழைத்து செல்வதற்கு என்றும் தனியாக டிரைவர் நியமித்து, அவர் இருக்கும் இடம் அருகில் கார் ஒன்றையும் நிறுத்தி வைத்துள்ளனர் தொழிலதிபர்கள். ஆனால், அந்த காரை பயன்படுத்தாமல், ஆட்டோவில் ஏறி கிரிவலம் செல்வார்
ஷேசாத்திரி ஆஸ்ரமம்:
இந்த சித்தர் சமீபகாலமாக திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் அமைந்துள்ள ஷேசாத்திரி ஆஸ்ரமத்தில் வசித்து வந்தார். இவரைப் பற்றி தமிழ்நாடு மட்டுமல்ல, வெளிநாடு, வெளிமாநிலம் என்று பலரும் தெரிந்துகொண்டு, இவரது அருளைப் பெற திருவண்ணாமலை வந்து சென்றுள்ளனர்.
அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் அடிக்கடி திருவண்ணாமலை சென்று, இவரது அருளைப் பெற்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன், கர்நாடகா மாநில டிவி சேனல்களிலும் மூக்குப் பொடி சித்தரைப் பற்றி செய்தியும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் காலமானார்.