டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

0
4358

செய்யாறு தாலுகா இருங்கல் கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து மதுபிரியர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் கடைக்கான விளம்பர பலகை வைத்தனர். மேலும் மதுபாட்டில்களை இறக்கி வைத்து, நேற்று மதியம் முதல் விற்பனை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை செய்யாறு – சேத்துப்பட்டு சாலையில் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here