திருவண்ணாமலை: ‘சொட்டு நீர் பாசனம் அமைக்க, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது’ என, வேளாண் உதவி இயக்குனர் செண்பகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதம மந்திரியின், விவசாயத்திற்கான நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தின் மூலம், குறைந்த தண்ணீரை கொண்டு, அதிக பரப்பில் சாகுபடி செய்ய முடியும். சொட்டு நீர் பாசனத்தில் பயிர் சாகுபடி செய்வதால், அதன் மூலம் கிடைக்கும் விளை பொருட்கள் தரமாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும். மேலும், அதிக மகசூலும் கிடைக்கும், சந்தையில், கூடுதல் விலை பெற்று லாபம் அடையலாம். எனவே, விவசாயிகள், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகளை பயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்ய, 2017-2018ம் ஆண்டிற்கு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 44.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்தில், அதிகபட்சமாக, ஐந்து ஏக்கர் வரையில் பயன்பெறலாம். இதர விவசாயிகள், 75 சதவீத மானியத்தில், 12.5 ஏக்கர் வரையில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைக்க, அரசு மானியம் பெறலாம். இத்திட்டத்தின் மூலம், பயன்பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு, தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விளை நிலத்தின் சிட்டா அடங்கல், நில வரைபடம், சிறு, குறு, விவசாயி என்பதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.