சென்னை: வேலை நிறுத்தம் தொடர்பாக சுமூக தீர்வு எட்ட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாக பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி கூறினார். இன்று காலை போயஸ் கார்டனுக்குச் சென்ற ஆர். கே. செல்வமணி ரஜினியை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியாவது:
பெப்சி தொழிலாளர்களுடன் பணியாற்றுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்புகளுக்குத் தடங்கல் ஏற்படுவதற்கு பெப்சி காரணம் இல்லை. 40 வருடங்கள் ஒப்பந்தம் போட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டோம் என்று சொல்வது நியாயம் அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முந்தைய நிர்வாகம் நிர்ணயித்த சம்பளத்தை இப்போது குறைக்க சொல்வது சரியல்ல.
பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 40 சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது. ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பும் நடக்கவில்லை. வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என பெப்சி நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். வேலைநிறுத்தம் செய்யாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ரஜினிகாந்த் அறிவுறுத்தினார். வேலைநிறுத்த போராட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார் என்று ஆர்.கே.செல்வமணி கூறினார்.