திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுத் துறை தணிக்கை அலுவலர்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாமின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள கூட்டுறவுத் துறை தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு விழுப்புரம் மண்டல கூட்டுறவு தணிக்கைத் துறை இணை இயக்குநர் வீ.கண்ணப்பன் தலைமை வகித்தார்.
கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநர் சா.சேவியர் ராஜ் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புத்தாக்கப் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார்.
சிந்தனை, சொல், செயல், நேர்மை என்ற தலைப்பில் பா.ரேணுகாம்பாள் சிறப்புரையாற்றினார். தணிக்கைத் துறையில் சிறப்பாக செயல்படுவது எப்படி என்பது குறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் வே.நந்தகுமார் தணிக்கை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதில், அலுவலகப் பணியாளர்கள் மொட்டையன், கார்த்திகேயன், செல்வப்பாண்டியன், விஜயரங்கன், முத்து, கண்ணன், கதிர்வேல், மகேஸ்வரி உள்பட தணிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.