கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, 2 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே கடலில் 170 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கனமழையால் கரை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் திடீர் மழையில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. குமரி மாவட்டத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது இதனால் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதே போன்று இலங்கையிலும் பெய்து வரும் கனமழையால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.