தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பும் அதிகரித்து வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என பொது மக்களிடம் பரிசோதனை மேற்கொள்வது அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.
பரிசோதனை அதிகப்படுத்தியதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று சென்னையில் 538 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 மண்டலங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. அங்கு குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மாநகராட்சி இணையதளம்
கோயம்பேடு மார்க்கெட் மூலம் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு மளமளவென உயர்ந்திருக்கிறது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் தொற்று நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது உடல்நலம் குறித்த தகவல்களை சுய பதிவு செய்து கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி https://covid.uhcitp.in/selfregister என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது சுய விவரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் விரைவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் நபர் கண்டறியப்பட்டு, அவருக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ளும்.