இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள்

0
1771

1.1.2020-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அன்றைய தினத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந்தேதி வரை பெறப்பட்டன.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 14,65,890 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 14,02,464 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 1,18,681 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக 97,155 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 1,78,409 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 1,22,817 ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,14,790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 90,943 ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6,13,06,638 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஆண்கள் 3,02,54,172 பேரும், பெண்கள் 3,10,45,969 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6,497 பேரும் அடங்குவர். ஆண்களை விட பெண்கள் 7 லட்சத்து 91 ஆயிரத்து 797 பேர் அதிகம் ஆவார்கள். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இங்கு மொத்தம் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,73,337 ஆவார்கள். வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 16 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
2020-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 5,85,580 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 3,22,167 பேரும், பெண்கள் 2,63,213 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 200 பேரும் அடங்குவர். வாக்காளர் பட்டியல்களை http://el-e-ct-i-ons.tn.gov.in எனும் தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் காணலாம். பெயரைச் சரிபார்க்கலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 01.01.2020 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்தும், www.nvsp.in என்ற இணையதளத்திலும், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘ Vot-er He-l-p-l-i-ne App ’ என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் இந்த மையங்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.
மேற்கண்ட தகவல் தமிழக அரசின் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here