ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 4 ஆவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ள மேடை, முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது
இந்நிலையில், ஜூன் 12 ஆம் தேதி காலை 11:27 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம் கன்னவரத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். இதற்காக கேசரபள்ளி ஐடி பார்க் அருகே உள்ள மைதானத்தில் விழாவுக்கான ஏற்பாடு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
70,000 பேர் அமரும் வகையிலும் நிகழ்ச்சி நடைபெறும்இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்களும் ஏழு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.