திருவண்ணாமலை: ‘அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு, உடனடி பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு பதிவுக்கு வெவ்வேறு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வந்ததை மாற்றம் செய்து, அனைத்து துறைக்கும் ஒரே மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு குறித்து, வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அக்., 1 முதல் பிறப்பு, இறப்பு பதிவுகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், கூடுதல் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பொதுசேவை மையம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மென்பொருள் பயன்பாடு குறித்து, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பதிவாளர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வட்டம் மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனைகளில் புதிய பிறப்பு, இறப்பு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்கள், மருத்துவமனையில் இருந்து செல்வதற்கு முன், பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.