திருவண்ணாமலை: கொட்டும் மழையில், மஹா தீப கொப்பரை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கொண்டாடப்படும் தீப திருவிழாவில் இன்று மாலை, 5:59 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று இரவு 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு. அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், 150 கிலோ எடை, ஐந்து அடி உயரம் கொண்ட மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் யானை ருக்கு, மற்றும் பசு ஆசிர்வதிக்க, 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 12 பேர் கொண்ட குழுவினர் மலை உச்சிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், மலை ஏறும் பாதையில் பாறைகளில் ஏற பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மஹா தீபம் ஏற்றுவதற்கான நெய்யும், திரியும் இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.