திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஆயிரம் கடைகள் அடைப்பு

0
2594

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மேலும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

திருவண்ணாமலையில் நேற்று பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு தண்ணீர் பாக்கெட் வாங்கக்கூட கடையில்லாமல் அவதிப்பட்டனர்.

கடையடைப்பு போராட்டம் குறித்து வணிகர் சங்கத்தினர் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு அடைந்து உள்ளது’ என்றனர்.

ஆரணி காந்தி ரோடு, பெரியகடை வீதி, மண்டி வீதி, கார்த்திகேயன் ரோடு மற்றும் அருணகிரிசத்திரம் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க அலுவலகத்தின் முன்பு ஆரணி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சி.எஸ். நாராயணன், சங்க செயலாளர் எஸ்.டி.செல்வம், பொருளாளர் கே.செங்கீரன், மாவட்ட துணைத்தலைவர் ஆடிட்டர் கே.எஸ்.சிவக்குமாரன், காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எஸ்.கே. சுபானி, ஆயில் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.குமரன், மருந்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.செந்தில்நாதன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர், போளூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here