வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றன.
அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை உலக பிரபலங்கள் என காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
அந்த வகையில் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் சென்னை வந்தார். காவிரி மருத்துவமனைக்கு சென்ற ராம் நாத் கோவிந்த் . தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக நேற்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து நேற்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வருகை தந்தனர். முதன் முறையாக நேற்று தயாளு அம்மாள் வருகை தந்தார். தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி மீண்டும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
நேற்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அரசியல் கட்சியினரும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொண்டர்கள் வா வா தலைவா, கலைஞர் வாழ்க என விடிய விடிய கோஷமிட்டபடியே இருந்தனர்.
இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, செல்வி, ஆ.ராசா வருகை தந்தார். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
கலைஞரின் உடல்நிலை குறித்து அறிய வைகோ காவேரி மருத்துவமனை வருகை தந்தார். காவேரி மருத்துவமனைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள் வருகை தந்தனர். கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நேரில் விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.