கைது தீர்ப்புக்கு அரசியல் காரணம் கிடையாது: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் காரணம் என்ன?

0
133
radhikasarathkumar_a642021

நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ‘இது என்ன மாயம்’. இந்த படம் தயாரிப்புக்காக ரேடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014-ம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.

இந்த பணத்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை, அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் உத்திரவாதம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் உள்ள சொத்துக்களையும் ரேடியன்ஸ் நிறுவனத்திடம் அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த உத்திரவாதத்தை மீறி ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை இவர்கள் தயாரித்து வெளியிட்டதால் ரேடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் ராதிகா, சரத்குமார் ஆகியோர் அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் பணத்தை திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த ரேடியன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 7 காசோலைகள் திரும்ப வந்ததையடுத்து மூன்று பேருக்கும் எதிராக ரேடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏ’க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனையும் , ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு இரண்டு வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்தநிலையில் சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘ஒப்பந்தம் முடிவதற்கு முன்னதாகவே செக்கை அவர்கள் வங்கியில் செலுத்தியுள்ளனர். அதன்மூலம் காசோலை மோசடி வழக்காககொண்டுவந்துள்ளனர். இது சரியான தீர்ப்பு அல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கவேண்டும். இதனை காசோலை மோசடி வழக்காகக் கொண்டுவந்திருக்கக் கூடாது. நான் இந்த வழக்கை தள்ளுபடி செய்வார்கள் என்று நினைத்துவந்தேன். 2 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் உள்ளது.

4.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உத்தரவாதம் கொடுத்துள்ளேன். ஆனால், 1.5 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்குக்கு இந்தத் தீர்ப்பு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியதால் எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையாக பார்க்கவில்லை. இது தனிப்பட்ட விவகாரம். இது முற்றிலும் தொழில்சம்மந்தமான விவகாரம். இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here