மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

  0
  1197

  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த ஆண்டு உதயமானது. அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தனித்து களம் காண்கிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில், இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 132 பேரும், இடைத்தேர்தலில் போட்டியிட 150 பேரும் விருப்பமனு அளித்தனர். அவர்களிடம் கமல்ஹாசன் முன்னிலையில் வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்தது.

  இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 20-ந் தேதி(நாளை) புதன்கிழமை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று கட்சி தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் நடிகர் நாசரின் மனைவி கமீலா, வடசென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜ், தூத்துக்குடி அல்லது தென்மாவட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நடிகை ஸ்ரீப்ரியா ஆகியோர் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

  நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தான் தொடங்கினார். மேலும் கமல்ஹாசன் பிறந்த மாவட்டமும் ராமநாதபுரம் தான். எனவே, கமல்ஹாசன் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here