திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, நகராட்சி, நிதியுதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் 7 ஆயிரத்து 659 மாணவ-மாணவிகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை எழுதினர். அவர்களில் 253 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்து
உள்ளனர். வடஆண்டாப்பட்டில் ஒரு மாணவி, கமலப்புத்தூரில் 3 மாணவர்கள்,
பழையமன்னையில் ஒரு மாணவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மேலும் துரிஞ்சாபுரம்
ஒன்றியத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 18
மாணவர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை முதன்மை கல்வி அலுவலர்
பாராட்டி பரிசளித்தார்.
இதில் வி.நம்மியந்தல் பகுதியை சேர்ந்த மாணவி சமீனா மாவட்டத்தில் முதல் இடத்திலும், மாநில அளவில் 6-ம் இடமும் பெற்று உள்ளனர்.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது:-
தேசிய
வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில்
9-வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. வரும் கல்வியாண்டில் அனைத்து
பள்ளிகளில் இருந்தும் தகுதியுடைய அனைத்து மாணவர்களையும் தேர்வில் பங்கு பெற
செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி
பெற வைக்க தலைமை ஆசிரியர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
வருகிற
கல்வியாண்டில் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 500 மாணவர்கள் தேர்ச்சி என்ற
இலக்கை அடையும் நோக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.