திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏற்றப்பட உள்ள, மஹா தீபத்தை காண, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்ட திரி, பயன்படுத்தப்பட உள்ளது. 40 கி.மீ., தூரம் வரை தெரியும் மஹா தீபத்தை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
இவர்கள் மழையை கண்டுகொள்ளாமல், கிரிவலம் சென்றவாறு உள்ளனர். கோவில் வளாகம் முழுவதும் பெங்களூரு, கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மஞ்சள், ஊதா, வெள்ளை, சிவப்பு என, 12க்கும் மேற்பட்ட பல்வேறு வண்ணங்களில், ஐந்து டன் சாமந்தி, ரோஜா பூக்களால் தோரணங்கள் செய்யப்பட்டு, இரண்டாம் பிரஹாரம் மற்றும் கொடி மரம் முகப்பு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை, 4:00 மணி முதல் கோவில் வளாகத்தில், திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின், பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, 3,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 8,465 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரிவலப்பாதையில், ஏழு இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.