‘சீல்’ வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு

0
2541

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி ஸ்கேன் சென்டர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்பதை அறிவிப்பதாகவும், பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் மத்திய சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து மத்திய சுகாதார குழுவினர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்களில் சோதனை நடத்தினர். இதில் விதிகளை மீறி செயல்பட்ட திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள 3 தனியார் ஸ்கேன் சென்டர்களில் உள்ள அல்ட்ரா சவுண்டு கருவிகள் உள்ள அறைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். பின்னர் திருவூடல் தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த பதிவேடுகளை ஆய்வு செய்ததில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த மருத்துவமனையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மருத்துவமனை டாக்டர் மீது மத்திய சுகாதார கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர் சுதேஷ்ஜோஷி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த டாக்டர் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here