சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: திருவண்ணாமலையில் விழாக்கோலம்

0
1578

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நேற்று காலை 7.05 மணிக்கு தொடங்கி, இன்று (திங்கட்கிழமை) காலை 6.50 மணிக்கு முடிகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதையொட்டி தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக செய்து வந்தது. கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு, கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள், குளிர்பானங்களை கைப்பற்றி அழித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையிலிருந்தே வெளியூர்களிலிருந்து திருவண்ணா மலைக்கு பக்தர்கள் வர தொடங்கினர். பெரும்பாலான விடுதிகள் நிரம்பி வழிந்தன. சித்ரா பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது.

அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. மேலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும் இடத்தில் அடிக்கடி தண்ணீர் ஊற்றப்பட்டது. தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மோர், தர்பூசணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததையொட்டி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

சித்ரா பவுர்ணமி காலை 7.05 மணிக்கு தொடங்கினாலும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு முழுவதும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று அதிகாலை 6 மணி அளவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

காலை 10 மணி முதல் கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக இருந்தது. இதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பக்தர்கள் சிலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் மலையை சுற்றி நடந்து சென்றனர். சில பக்தர்கள் குடைபிடித்தப்படி கிரிவலம் சென்றனர்.

வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லாமல் தற்போது கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதையில் நடந்து சென்றனர். மதியம் 12 மணி அளவில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பலர் காலணிகள் அணிந்து கிரிவலம் சென்றனர்.

மாலை 4 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

கிரிவலப்பாதையில் 106 இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்கு வெளியே 14 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்து அங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு பக்தர்கள் வர இலவச பஸ் வசதி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. மேலும் திருவண்ணாமலைக்கு வரும் வெளிமாவட்ட பக்தர்களின் வசதிக்காக 2,825 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரன் தலைமையில், டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் முக்கிய பிரகாரங்கள், கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. சித்ரா பவுர்ணமியையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கிரிவலப்பாதையில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், கோவிலின் உட்பிரகாரத்தில் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

15 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் கிரிவலப்பாதையின் முக்கிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் கோவிலில் 2 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ், கிரிவலப் பாதையில் அவசரத்திற்கு செல்ல மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அமைக்கப்பட்டு இருந்தன.

திருவண்ணாமலைக்கு வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த நகரின் ஒதுக்குப்புற பகுதியில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here