இனியும் மோடியை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் சும்மா இருக்க மாட்டோம்.. தமிழிசை ஆவேசம்!

0
1731

சென்னை: நாட்டுக்கு நல்லது செய்துவரும் பிரதமர் மோடியை அவமரியாதை செய்வதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட ஏழை மாணவி அனிதாவின் மருத்துவர் கனவு நீட் தேர்வால் சுக்குநூறாகியது. இதனால் அவர் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தும் போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே பிரதமர் மோடியை அவமரியாதை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நீட் தேர்வை பொருத்தமட்டில் இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதுமட்டுமல்ல நீட் போன்ற தேர்வை எதிர் கொண்டால் மட்டுமே கடுமையான, சவாலான மருத்துவ படிப்பை எதிர்கொள்ள முடியும்.

சமூக நீதி எங்கே
தவறாக படித்துவிட்டு தவறாக சிகிச்சை அளித்துவிட்டு பலர் மரணமடைந்தால் அதை இந்த தேசம் ஒப்புக் கொள்ளுமா. அதைதான் நீட் தடுக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா. சமூக நீதி எங்கே சீர்குலைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோருக்குத்தான் வாய்ப்பு
சமூக நீதி என்று வரும் போது சென்ற ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மருத்துவ படிப்பில் சேர்ந்தது 39 பேர் மட்டுமே. ஆனால் இந்த ஆண்டு 139 பேர் சேர்ந்துள்ளனர்.ஓபன் கோட்டாவில் 515 பேர் சேர்ந்திருப்பதாக சொல்லப்பட்டாலும் அதிலும் குறிப்பிட்ட சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சேர்ந்துள்ளனர்.

தன்னம்பிக்கையை வளர்த்த நீட்
உயர் வகுப்பினர் வெறும் 91 பேர் மட்டுமே மருத்துவம் சேர்ந்துள்ளனர். ஏனையோர் அதிகளவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்தான். ஆக. எங்கே சமூக நீதி சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. கிராமத்து மாணவர்கள் கோடிக்கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே தனியார் கல்லூரிகளின் வாசலையே மிதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நீட் கொடுத்திருக்கிறது.

3 முறை நீட் எழுதலாம்
பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காவிட்டால் மாணவர்களது மருத்துவம் கனவு அப்படியே சரிந்து விடும். ஆனால் இந்த நீட் தேர்வின் மூலம் 3 முறை நீங்கள் தேர்வு எழுதலாம். இந்த முறை வெற்றி பெறாவிட்டால் அடுத்த முறை , அடுத்த முறை இல்லாவிட்டால் அதற்கடுத்த முறை என வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டு.

விபரீத முடிவு வேண்டாம்
இதனால்தான் அனிதா போல் மாணவ, மாணவிகள் விபரீத முடிவை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன். இது போல் வாய்ப்புகள் எங்கே கொடுக்கப்படுகிறது. தமிழுக்காக தமிழ் மீது காதல் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் ஆட்சியின் போது தமிழுக்கு என்ன செய்தார்கள்.

தமிழை காப்போம்

தங்கள் நிறுவனங்களுக்கே தமிழ் பெயர் வைக்காதவர்கள். தமிழை காப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் மத்திய அரசு தமிழ் வழியிலும் நீட் தேர்வு எழுதலாம் என்று அறிவித்தது. சமூக நீதி என்று மக்களை ஏமாற்றி ஏமாற்றி அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

கொடூர அரசியல்

இதை பாஜக கேட்டதற்கு அனிதா என்ற குழந்தையின் தற்கொலையை சூழ்ச்சியாக மாற்றி கொடூர அரசியல் செய்து வருகிறார்கள். இனி நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு தர்மயுத்தம் ஆரம்பித்து விட்டது. பிரதமரை செருப்பால் அடிப்பது, துடைப்பத்தால் அடிப்பது போன்றவற்றை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நல்லதை செய்து விட்டு பிரதமர் மோடி ஏன் அவபெயர் வாங்க வேண்டும்.

சம தர்மம்

சம தர்மம் என்று சொல்லி தர்மத்தை அழித்து கொண்டிருப்பவர்களுக்கும் ஜாதி அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. வேறு கல்வி கற்கிறேன் என்று சொன்ன அனிதாவை உச்ச நீதிமன்றம் வரை கூட்டிச் சென்றது யார், மனதை குலைத்தது யார், தற்கொலைக்கு தூண்டியது யார், அந்த பெண்ணின் மரணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பது யார். இதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது. இன்றிருந்து தர்மயுத்தம் ஆரம்பித்துவிட்டது.

முகத்திரையை கிழிப்போம்
தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருந்த அரசியல்வாதிகளை புறமுதுகிட்டு ஓட செய்யும் , அவர்களது முகத்திரையை கிழிக்கும் அரசியலை பாஜக மேற்கொள்ளும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here