ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போட்டா போட்டி கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன

0
2131
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமியிடம் அன்றைய தினம் சுயேச்சையாக போட்டியிட 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 29-ந்தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டு தயம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
1-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 13 பேர் மனுத்தாக்கல் செய்தனர். தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் நடந்தது
இந்தநிலையில் 2-ந்தேதி (மீலாது நபி) மற்றும் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை என்பதால் 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவில்லை. இந்தநிலையில் வேட்புமனுத்தாக்கல் நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று காலை 9 மணி முதலே சுயேச்சைகள் குவிந்தனர். 11 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியவுடன் சுயேச்சைகள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அலைமோதியதால் சுயேச்சைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் வேட்புமனுத்தாக்கல் நடந்தது. மொத்தம் 110 டோக்கன்கள் வழங்கப்பட்டது.
வேட்புமனுத்தாக்கல் நேரம் மதியம் 3 மணி முடிந்த பின்னரும் சில சுயேச்சைகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் போலீசாரிடம் கெஞ்சினர். எனினும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேல் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடைசிநாள் பரபரப்பில் தேசிய கட்சிகளான பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி, நடிகர் விஷால், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
மாலை 3 மணி வரை 110 மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி பெற்றிருந்தார். இதில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி தலைவர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோரின் கூடுதல் மனுவும் அடங்கும். இந்த மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி ஆய்வு செய்த பின்னர் ஒப்புதல் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here